search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ்காரருக்கு கத்திகுத்து"

    திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்திய போலீஸ்சாரை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் செந்தில்குமார் (வயது 31).

    இவர் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    திருவெண்ணைநல்லூர் பேரங்கியூர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை போலீஸ்காரர் செந்தில்குமார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்.

    அந்த மோட்டார் சைக்கிளில் லாரிக்கு பயன் படுத்தப்படும் பேட்டரி ஒன்று இருந்தது. இதைப் பார்த்த செந்தில்குமார், இந்த பேட்டரி யாருக்கு உள்ளது? எங்கேயும் திருடி வருகிறீர்களா? உங்கள் ஊர் என்ன? என்று கேட்டார்.

    அதற்கு அந்த 3 பேரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீஸ்காரர் செந்தில்குமார் அந்த 3 பேரையும் விசாரணை நடத்த போலீஸ் நிலையம் வருமாறு அழைத்தார்.

    ஆனால், அதற்கு அவர்கள் மறுத்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து போலீஸ்காரர் செந்தில்குமாரை சரமாரியாக தாக்கினர்.

    அதில் ஒருவர் தனது கையில் இருந்த கத்தியால் செந்தில்குமாரின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் வழிந்த நிலையில் அவர் கீழே சாய்ந்தார். உடனே அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீஸ்காரர் செந்தில்குமாரை மீட்டு முண்டியம்பாக்கம் மருத் துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் போலீஸ்காரர் செந்தில்குமாரை தாக்கியவர்கள் பேரங்கியூர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், ஜெயப்பிரகாஷ், ராமச்சந்திரன் ஆகியோர் என்று தெரியவந்தது.

    இதையடுத்து பாலகிருஷ்ணனையும், ஜெயப்பிரகாசையும் போலீசார் கைது செய்தனர். ராமச்சந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×